புதன், 7 அக்டோபர், 2009

மஹாவித்துவான் பிரம்மஸ்ரீ ந. வீரமணி ஐயர்

“கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன் நற்கதி அருள்வாயம்மா...” இந்தப் பாடலை உச்சரிக்காத நா இல்லை என்றே சொல்லலாம். அந்தளவிற்கு எல்லோர் மனதிலும் நீங்கா இடம்பெற்ற ஒரு அருமையான பாடல். ஆனந்த பைரவி இராகத்தில் ஆரம்பமாகி அமைந்த ஒரு ராகமாலிகா. இந்தப் பாடலை பாடியவர் தென்னிந்திய பிரபல பின்னனிப் பாடகர் ரி.எம்.சௌந்தரராஜன். இதை எழுதியவர் பிரம்மஸ்ரீ ந.வீரமணி ஐயர்.
கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்....பாடல்
இன்றுதான் அவர் எம்மை பிரிந்த நாள் ( 08.10.2003 ) இசையுலகும் நடன உலகும் அதிர்ந்து நின்ற நாள். ஈழதேசம் மிகப்பெரிய ஒரு மஹாவித்துவானை இழந்த நாள். இயல், இசை, நாடகம் என முத்தமிழிலும் மூழ்கி அதிலிருந்து முத்துக்களை மட்டுமே எமக்கு தந்த இயலிசைவாரிதி மறைந்தநாள். இசையாகட்டும், நடனமாகட்டும், பாடல்கள் இயற்றுவதாகட்டும் எல்லாத்துறையிலும் தனது பன்முக ஆளுமையை வெளிப்படுத்திய சாகித்ய சாகரம் வீரமணி ஐயாவின் நினைவுதினப் பதிவு இது.


சைவமும் தமிழும் தழைத்தோங்கும் இணுவையம்பதியில் 1931ம் ஆண்டு ஐப்பசி மாதம் 15ம் திகதி இந்த பூவுலகில் கால் பதித்தார். ஆரம்பக் கல்வியை இணுவில் சைவப்பிரகாச வித்தியாலயத்திலும், உயர் கல்வியை மானிப்பாய் இந்துக் கல்லூரியிலும் பயின்றார். படிக்கும் காலத்திலேயே தன்னுடைய கலைத்திறமையை வெளிக்காட்டி மிகவும் ஆணித்தரமாக தன்னுடைய காலை கலை உலகில் பதித்தார். 1947 ம் ஆண்டு 16 வது வயதில் பாடசாலையில் நடந்த ஒரு பரிசளிப்பு விழாவில் “மனோகரா” நாடகத்தில் பெண்வேடமிட்டு நடனமாடி பல முகபாவங்களை காட்டி நடித்தார். அரங்கத்தில் இருந்தோர் எல்லாம் மெய்சிலிர்த்து பார்த்துக் கொண்டு இருந்தனர். பார்த்துக் கொண்டு இருந்த கல்லூரி அதிபர் உடனேயே அலுவலகத்திற்கு சென்று “சகல துறைகளிலும் மிளிர்ந்த மாணவன்” என்ற ஒரு வெள்ளிப்பதக்கத்தை அந்த மேடையிலேயே வீரமணி அய்யாவிற்கு சூட்டி மகிழ்ந்தார். வளர்ந்து பட்டப்படிப்புக்காக சென்னை வந்தார். விஞ்ஞான மானி பட்டம் படிக்கவே வந்தார். ஆனால் புலன்கள் எல்லாம் இசையிலும் நடனத்திலும் சென்றது. உலகமே போற்றும் இசை மேதை பாபநாசம் சிவன் மற்றும் எம்.டி. இராமநாதன் ஆகியோரை தனது இசைக்கான குருவாகவும், கலாஷேத்திரத்தில் புகழ்பூத்த நாட்டிய மேதை ஸ்ரீமதி ருக்மிணி தேவி அருண்டேல், சாரதா ஆகியோரை நாட்டியத்துக்கான குருவாகவும் வரித்து கொண்டு இசையிலும், நடனத்திலும் தனது திறனை செவ்வனே வெளிப்படுத்தினார்.
சிறு வயதில் பெண்வேடத்தில் வீரமணி ஐயா

இவ்வண்ணம் பயின்று வரும் காலத்தில் மயிலாப்பூர் கபாலீஸ்வர ஆலய கற்பாகம்பாள் மீது கொண்ட பக்தி காரணமாக உருவானதுதான் ”கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்..” என்ற சாகித்தியம். மிகப்பிரபல்யமான ஒரு பாடல். வெளிவந்த ஆண்டு 1956. ரி.எம்.எஸ் அவர்களின் குரல் கேட்பவரை நெகிழச்செய்யும். இந்தப் பாடலிற்கு வயலின் வாசித்தவர் உலகம் போற்றும் குன்னக்குடி வைத்தியநாதன். இவ்வளவு காலமாகியும் பாடல் இன்றுவரை இதயத்துள் கூடாரமிட்டு ஒலித்துக் கொண்டு இருக்கிறது. ஒரு முறை வானொலி அறிவிப்பாளர் இளையதம்பி தயானந்தா அவர்கள் வீரமணி ஐயா அவர்களிடம் ஒரு கேள்வி கேட்டாராம். நீங்கள் இயற்றிய பாடல்கள் வெற்றி பெற்றிருக்கிறது. ரி.எம்.எஸ் பாடிய எத்தனையோ பாடல்கள் வெற்றி பெற்றிருக்கின்றன், ஏன் நீங்கள் இயற்றிய இந்தப்பாடல் இவ்வளவு தூரம் வெற்றி பெற்றது என்று. வீரமணி ஐயா அவர்கள் ஒரு கணம் ஆடிப்போனார். பின்னர் சுதாரித்துக் கொண்டு சொன்னாராம் இவ்வாறு... “நான் அந்தப் பாடலை இயற்றி என்னுடைய குருநாதர் பாபநாசம் சிவனிடம் காட்டினேன். அவரும் ராகத்திற்கு ஏற்றாற்போல் பாடிப் பார்த்துவிட்டு... ‘சிற்பம் நிறைந்த சிங்கார கோயில் கொண்ட...’ என்ற வரியில் ஏதோ ஒன்று தவறவிடப்பட்டது போன்ற உணர்வு வருகிறது. நான் ஏதாவது மாற்றம் செய்யலாமா? என்று கேட்டார். நானும் அதற்கு மனப்பூர்வமாக சம்மதம் தெரிவிக்க பாபநாசம் சிவன் அவர்கள் “சிற்பம் நிறைந்த உயர் சிங்காரக் கோவில் கொண்ட..” என்று ‘உயர்’ என்ற சொல்லை சேர்த்தார். சேர்த்த அந்த உயர் என்ற சொல்லால் பாடலை யாத்த எனக்கு உயர்வைத் தந்தது. பாடலைப் பாடிய ரி.எம்.எஸ் ற்கு உயர்வைத்தந்தது. பாடலுக்கு வயலின் வாசித்த குன்னக்குடி வைத்தியநாதனுக்கு உயர்வைத்தந்தது”. குருவின் அந்த ஆசீர்வாதமே அவரை இந்தப் புகழின் உச்சிக்கு எடுத்துச் சென்றது என்றால் மிகையல்ல. இதனை இளையதம்பி தயானந்தாவின் “வானலையின் வரிகள்” என்ற நூல் வெளியீட்டு விழாவில் அவர் உரையாற்றும் போது சொல்லி மகிழ்ந்தார். நேரடியாகவே என் காது பட கேட்டேன். அநேகமாக அதுதான் அவர் கலந்து கொண்ட இறுதி விழாவாக இருந்திருக்க வேண்டும்.
டி.எம்.சௌந்தரராஜன் அவர்கள் தம் கைப்பட வீரமணி ஐயர் பற்றி எழுதியது

வீரமணி ஐயா அவர்கள் பலதுறை கலைஞர். இசையாகட்டும், நடனமாகட்டும், பாடலாக்கம் ஆகட்டும் இவர் இறுதிக்காலம் வரை அதில் புதுமைகளை செய்து கொண்டு இருந்தார். நடனத்தில் புதிய புதிய முத்திரைகளை உருவாக்குவதிலும், இசையில் புதிய ராகங்கள், சாகித்தியங்கள் இயற்றுவதிலும், இராகங்களுக்கு பாடல்கள் இயற்றுவதிலும், கோவில்களுக்கு பாடல்கள் என அவர் எப்பொழுதும் தான் சார்ந்த கலைக்கு தொண்டாற்றி கொண்டே இருந்திருக்கிறார். இராகங்களுக்கு பாடல் இயற்றுவதை தமிழில் “வாக்கேயகாரர்” என்று சொல்லுவார்களாம். யாழ்ப்பாணம் தந்த மிகப்பெரும் வாக்கேயகாரரை நாம் இழந்து இற்றைக்கு 6 வருடங்கள் ஆகிவிட்டன. கர்நாடக இசையிலே 72 மேளகர்த்தா ராகங்களுக்கான பாடல்கள் இயற்றி இசை உலகை தன்பக்கம் ஒருமுறை திரும்பிப் பார்க்க வைத்தார். காரணம் இப்படி 72 மேளகர்த்தா இராகங்களுக்கும் பாடல்கள் இயற்றியவர்கள் கோடீஸ்வர ஐயர், ராமசுவாமி தீக்‌ஷிதர், மகாவைத்தியநாதர், போன்ற சிலரே. இதனால்தான் இவர்பால் அனைவர் கண்ணும் திரும்பியது.
கர்நாடக சங்கீத மேதை டாக்டர். பாலமுரளிகிருஷ்ணா வீரமணி ஐயர் பற்றி அனுப்பிய வாழ்த்து

கர்நாடக சங்கீத உலகில் பாலமுரளிகிருஷ்ணா ஒரு சகாப்தம். அவர்கள் ஒருமுறை 1980 ம் ஆண்டளவில் யாழ்ப்பாணம் வந்த போது இவரது வாக்கேயகாரத் திறனை அறிந்து வியந்து நாலு சுரத்தில் இராகம் அமைத்துப் பாடமுடியுமா என கேட்டார். அடுத்த கணமே வீரமணி ஐயா ‘ஸகமநிஸ’ என்ற ஆரோகணத்தையும் ‘ஸநிமகஸ’ அவரோகணத்தையும் கொண்ட ‘ஜெயம்’ என்ற இராகத்தை உடனேயே ஆக்கி ஆதி தாளத்தில் “ஜெயமருள்வாய் ஜெகதீஸ்வரா / ஜெயகௌரி மணாளா - தயாளா” என்ற கீர்த்தனையை உடனே இயற்றினார். வாயடைத்து நின்ற பாலமுரளிகிருஷ்ணா பாராட்டுப்பத்திரம் வழங்கி விட்டு சென்றார்.
பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்கள் வீரமணி ஐயர் பற்றி இயற்றிய வெண்பா

தான் ஒரு மேம்பட்ட கலைஞன் என்று அவருக்கு வித்துவச்செருக்கு என்றைக்குமே இருந்ததில்லை. சிறுவர்களுடன் சேர்ந்து பரராஜசேகரப்பிள்ளையார் வீதியில் ஆடி மகிழ்வார். அவர்களை கைகளால் தாளம் போட வைத்து ஆட்டுவித்து மகிழ்வார். இதைவிட பெரிய பண்பு இளம் கலைஞர்களை ஊக்குவிக்கும் தன்மை. சக கலைஞனை மதிக்கும் தன்மை. நான் தான். தான் தான். என்ற மமதை அற்ற மாமனிதர். இதற்கு சிறந்த உதாரணமாக, இவர் தொடர்பாக நல்லூர் ஆஸ்தான நாதஸ்வர வித்துவான் பாலமுருகன் அவர்களுடன் உரையாடிய சமயம் அவர் பகிர்ந்து கொண்டது. ஒருநாள் இணுவில் பரராஜசேகரப்பிள்ளையார் ஆலயத்தில் கானமூர்த்தி, பஞ்சமூர்த்தி மற்றும் உதயநாதன் குழுவினருடன் பாலமுருகனும் வாசித்து கொண்டிருந்தார். ‘கனகாங்கி’ இராகத்தை நாதஸ்வரத்தில் வாசித்துக் கொண்டிருந்தாராம். அந்த இராகத்துக்கான கீர்த்தனை தொடர்பான சகல நெளிவு சுளிவுகளை முன்னரே வீரமணி ஐயா அவர்களிடம் படித்திருந்தார் பாலமுருகன். அன்று அந்த கடினமான இராகத்தை வாசித்து கொண்டு இருக்க, திடீரென ஆலயத்துக்குள் குளித்து உடல் துவட்டாமல் ஈரம் சொட்ட சொட்ட வீரமணி ஐயா நுழைந்து கையில் கொண்டு வந்த ஒரு பதக்கத்தை பாலமுருகனுக்கு அணிவித்து விநாயகரில் சாத்தி இருந்த அறுகம்புல் எடுத்து கையில் கொடுத்து.. “நீ நீடுழி வாழணும் நல்லா இருக்கணும்டா கண்ணா, இன்னும் இன்னும் நிறைய வாசித்து புகழ் அடையணும்” (அவர் சொன்னால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள் அவரோடு பழகியவர்கள்) என்று வாழ்த்திவிட்டு அந்த இடத்தை விட்டும் நீங்கிவிட்டார். அந்த நாதஸ்வர இசை அவரை ஈர்த்துவிட்டது. அடடா இப்படி வாசிக்கிறானே என்று தான் நின்ற கோலத்தையும் மறந்து ஈர வேட்டியுடன் வந்து வாழ்த்திய பண்பு எந்தக் கலைஞனுக்கும் வராது. கலைஞனை அவனது நிகழ்ச்சி முடியும் முன்னர் வாழ்த்துவது அல்லது விமர்சிப்பது என்பது அந்தக் கலைஞன ஊக்கபடுத்துவதோடல்லமால் மேன்மேலும் வளர உதவும். அந்த வாழ்த்திய தருணத்தை கண்டு பாலமுருகன் திகைத்து போனாராம். இன்றும் அதை நினைக்கும் போது நெகிழ்ந்தும் உணர்ச்சி வசப்பட்டும் போய்விடுகிறார்.

இவர் பெற்ற பட்டங்கள் ஏராளம். இங்கே அவற்றை தருவதற்கு போதிய இடம் இல்லை. ஆனால் அவரை யாழ்ப்பாணப் பல்கலைகழகம் சிறுமைப்படுத்தி விட்டது என்று என்னுடைய சிற்றறிவு சொல்கிறது. அவரை சிறுமைப்படுத்தி தன்னையே தாழ்த்திக் கொண்டு விட்டது. காரணம் உலகம் போற்றுகின்ற ஒரு ஒப்பற்ற கலைஞனுக்கு இந்த யாழ்ப்பாண பல்கலைக்கழகம் 1999 ம் ஆண்டு வெறும் கௌரவ முதுகலைமாணி(M.A) பட்டம் மட்டுமே வழங்கியிருந்தது. என்னைப் பொறுத்த வரை, எந்தவிதத்தில் அவர் குறைந்தவர் ‘கலாநிதி’ பட்டம் பெறுவதற்கு என தெரியவில்லை. இதே அடிப்படையில் கௌரவிக்கப்படாத ஒரு கலைஞன் அளவெட்டி நாதஸ்வர வித்துவான் கலாசூரி என்.கே பத்மநாதன். அவர் இறந்த பின்னர் அவருக்கு அந்த கலாநிதி பட்டத்தை வழங்கி மேலும் ஒரு முறை தான் இன்னமும் குறுகிய வட்டத்துக்குள்ளேயே நிற்கிறேன் என்று நிரூபித்தது. நான் சிந்திப்பது தவறாக இருக்கலாம். ஆனால் அதற்கான காரணத்தை அறியத்தந்தால் நன்றாக இருக்கும்.

2002 ம் ஆண்டளவில் நித்யஸ்ரீ மகாதேவன் அவர்கள் யாழ்ப்பாணம் வந்து நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனத்தில் மாபெரும் இசைநிகழ்ச்சி ஒன்றினை நடாத்தினார். அந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்த வீரமணி ஐயர் அவர்கள் மெய்மறந்து அந்த நிகழ்ச்சியினை ரசித்தார். அந்த நிகழ்ச்சிக்கு அனுசரனையாளர்களாக இருந்த இலங்கை வங்கியினர் தமது வங்கி பற்றி ஒரு பாடலை எழுதித்தருமாறு கேட்டனர். நீங்கள் எழுதித்தந்தால் தாங்கள் அதனை நித்யஸ்ரீ மூலம் பாடுவிப்போம் என்று கூற, வீரமணி ஐயரும் தமக்கே உரித்தான விதத்தில் உடனடியாக பாடலை எழுதிக்கொடுத்தார். நித்யஸ்ரீ அவர்களும் சவாலாக எடுத்து அதனை மேடையிலேயே உடனே பாடி அனைவரது பாராட்டையும் பெற்றுக் கொண்டார். இதுதான் வீரமணி ஐயா. சீர்காழி அவர்களுடன் சுட்டிபுரம் அம்மன் கோவிலில் நிகழ்ச்சிக்காக சென்ற போது காருக்குள்ளேயே பாடல் எழுத அதனை சீர்காழி மேடையில் பாடினார். இப்படியான நிகழ்வுகள் ஐயா அவர்களுக்கு அடிக்கடி நிகழ்ந்தது.

ஒரு கலைஞனை கௌரவிக்கும் பண்பு வளர்ந்து சென்றால் கலைகள் காக்கப்படும். அதனை பலரும் இன்னமும் செய்து கொண்டிருக்கிறார்கள். எல்லோரும் சேர்ந்து இப்படியான நிகழ்வுகளுக்கு ஆதரவு நல்க வேண்டும். 1971 காலப்பகுதிகளில் நடைபெற்ற யாழ்.பல்கலைக்கழக உருவாக்கம் தொடர்பான ஒரு கூட்டத்தில் யாழ்ப்பாணப் பல்கலைகழகத்தில் நடனம், இசை, சித்திரம் என்பன சேர்க்கப்படவேண்டும் என வலியுறுத்தி அதற்கான முன்முயற்சிகளில் ஈடுபட்டவர்களில் ஒருவர் வீரமணி ஐயா என்று யாழ்ப்பாணப் பல்கலைகழக சமஸ்கிருதத் துறை தலைவர் கலாநிதி.வி.சிவசாமி ஒருதடவை குறிப்பிட்டிருந்தார். இன்று அவர் கனவு நிறைவேறிவிட்டது. ஆனால் இவற்றிற்கெல்லாம் அலட்டிக் கொள்ளாமல் கடைசிவரை தான் சார்ந்த கலைகளை தன் தாய்மண்ணிலே பரப்புவதற்கு அவர் தன்னாலான முயற்சிகளை மேற்கொண்டுகொண்டே இருந்தார். இன்றும் அவற்றை அவருடைய துணைவியார் ஸ்ரீமதி சுசீலாதேவி தனித்து நின்று செய்து கொண்டு இருக்கிறார்.

அழகு தமிழில் புகுந்து விளையாடி அற்புதமான படைப்புக்களை தந்ததோடு மட்டுமல்லாமல் நடனத்துறையிலும் தமக்கென ஒரு தனியிடத்தை அமைத்து அந்த பாதையில் நிறைய மாணாக்கர்களை பயணிக்கவைத்து தமிழ் பேசும் நல்லுலகிற்கு அரும்பெரும் சேவையாற்றியுள்ளார். அவர் வழி வந்த பலர் இன்றும் பேரும் புகழோடும் இசையுலகில் இருக்கின்றார்கள் என்பது ஐயா அவர்களுக்கு கிடைத்த ஒரு பெரிய புகழே. சாகித்திய சாகரம் இன்று எம்மோடு இல்லை. அவர்களை நினைவு கூர்ந்து அவரது படைப்புக்களை நாம் பேணிப் பாதுகாத்து அதனை இன்னும் பல தலைமுறைகளுக்கு எடுத்துச் செல்ல வேண்டும். இப்படியான ஒரு நேரத்தில் அவர்களது பாடல்களை உள்ளூர் கலைஞர்கள் தவிர்ப்பது ஏன் என்று விளங்கவில்லை. அப்படி ஒரு பாடலை பாடி மேடையை அலங்கரிப்பதில் அவர்களுக்கு என்ன இடைஞ்சல் என்றும் தெரியவில்லை. நாமே அவற்றை வளர்ப்பதற்கு முன்னிற்கவில்லை என்றால் மற்றவர்களிடம் எப்படி எதிர்பார்க்க முடியும். இந்த விடயத்தை வட-இலங்கை சங்கீத சபையினருக்கு சமர்ப்பணம் செய்கிறேன்.

வீரமணி ஐயா பற்றி குறிப்பிடுவதற்கு நிறைய உள்ளது. ஆனால் பதிவு நீண்டு விடும் என்ற காரணம் ஒருபக்கம் இருக்கிறது. மீண்டும் ஒருதடவை ஒரு அந்தப் பெரும் கலைஞனை மனதிலே போற்றி, மண்ணிலே கலை வளர்க்க எம்மாலான காரியங்களை செய்ய வேண்டும்.

வாழ்க ஐயா நாமம்..!! வளர்க அவர் புகழ் !!!

நன்றி : திருமதி சுசீலாதேவி வீரமணி ஐயர் , வசந்தி வைத்திலிங்கம், பூலோகநாதன் கோகுலன்

27 கருத்துகள்:

கருத்துரையிடுக