வியாழன், 23 ஜூலை, 2009

ஆண்ட இனம் மாண்டழிய அருள்வாயோ!

காலப்பெருவெளியின் ஓட்டத்தில் நாம் கட்டுண்டு அதனோடு அடித்துச் செல்லப்படுகிறோம். கடுகதி வாழ்க்கை. கண்டவருடன் கதைக்க முடியாத நிலை. காரணம். காலத்தின் வேகம். நேற்று நடந்தது போல் உள்ளது ஆனால் இன்று ஒரு வருடம் ஆகிவிட்டது. இரு வருடம் ஆகிவிட்டது என்றெல்லாம் புலம்புகிறோம். எல்லாமே காலம் எம்மை தன்னோடு கடத்தியதால் வந்த மாயம். ஆனாலும் அவ்வப்போது நாம் அன்றாட வாழ்வில் நடந்தவற்றை நினைவு கூறுகின்றோம். சிலவற்றை தவறவிடுகிறோம்.

எங்கே போனாலும், எதை செய்தாலும் இன்றும் பசுமரத்தாணி போல இருப்பது நமது பராய வாழ்வு தந்த பலாச்சுளை நினைவுகள் தான். தனியே இருந்து வானம் பார்த்து அல்லது இயற்கையோடு அளவளாவி நினைத்து பார்க்கின்ற போது அவை கனத்த நினைவுகளாகவும் இருக்கலாம் அல்லது கனிவான நினைவுகளாகவும் இருக்கலாம். அந்த இனிய நினைவுகளால் சிரிப்பும் வரும். சில வேளை விழியோரம் சிறு துளி எட்டியும் பார்க்கும்.

"சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப்போல வருமா....?" இந்தப்பாடல் கேட்காத தமிழ்க்காது இருக்கவே முடியாது. அதுவும் ஈழத்தமிழர்களில் அநேகம்பேர் இந்தப் பாடலை கேட்காவிட்டாலும் இந்த வரிகளை சொல்லி இருப்போம். காரணம் எமது மக்களின் இடப்பெயர்வுகளும் புலப்பெயர்வுகளுமே.

வரலாறு படிக்கின்ற பாடசாலைக்காலங்களில் ஒரு பாடம் இருக்கும் தென்மேற்கு நோக்கிய இராசதானி நகர்வு. அதாவது அந்தக்காலங்களில் இலங்கையில் ஆண்ட மன்னர்கள் தமது அரசாட்சியை பல்வேறு காரணங்களுக்காக தென்மேற்கு நோக்கி நகர்த்தினர். ஆக அந்தக்காலத்திலும் இடப்பெயர்வுகள் இருந்திருக்கின்றன. ஆனால் ஈழத்தமிழர் கண்ட இடப்பெயர்வுகள் கொஞ்ச நஞ்சமல்ல.

சொந்த வீடு, சேர்த்த சொத்து, காலம் காலமாக கட்டிகாத்து வந்த பல முதுசங்கள் எல்லாம் ஒரு மணி நேரத்துக்குள் இழக்க வேண்டிய ஒரு துர்ப்பாக்கிய நிலை. இப்படி இடம்பெயர்ந்து மரங்கள், பாடசாலைகள், உறவினர் வீடு என சென்று இருந்தாலும் நாம் எமது வீட்டில் வசிப்பது போன்று வருமா. இன்றும் உயர்பாதுகாப்பு வலயம் என எமது தாய்நிலங்கள் அபகரிக்கப்பட , அதனை இழந்த அப்பாவி மக்கள் வெறும் குடிசைகளில் தமது வாழ்வைக் கழிக்கின்றனர். குடியிருக்கின்றனர். கேட்பார் எவரும் இல்லை. இவர்கள் செய்த பாவம்தான் என்ன? சொந்த நிலம், தமது உழைப்பு பணத்தில் கட்டிய சொந்த வீடு எல்லாம் இருந்தும் ஏதும் இல்லாத ஏதிலி நிலை.

--------

அண்மையில் வெளிவந்த ஒரு திரைப்படப்பாடல். நெஞ்சை நெக்குருக வைத்துவிட்டது. "ஆயிரத்தில் ஒருவன்" திரைப்படத்தில் இடம்பெற்ற "பெம்மானே பேருலகின் பெருமானே, ஆண்ட இனம் மாண்டொழிய அருள்வாயோ....." பம்பே ஜெயஸ்ரீ அவர்களின் தேனான குரல். பி.பி.ஸ்ரீனிவாஸ் அவர்கள் இறவனை இறைஞ்சும் குரல் மூலம் அற்புதமாக அமைந்துள்ளது. மனதைப் பிழியும் ஒரு பாடல். படத்தின் கதைக்கு இந்தப்பாடல் பொருந்துமோ பொருந்தாதோ தெரியாது. ஈழத்தமிழனின் துயர் சொல்லும் அருமையான பாடல். இந்தப் படைப்பை எமக்கான படைப்பாகவே பார்க்க வேண்டியுள்ளது.

பெம்மானே! பேருலகின் பெருமானே!
ஆண்ட இனம் மாண்டழிய அருள்வாயோ!
வெய்யோனே! ஏனுருகி வீழ்கின்றோம்!
வேய்ந்தழிந்து மாய்கின்றோம் விதிதானோ!
புலம்பெயர்ந்தோம்! பொலிவிழந்தோம் புலன் கழிந்தோம்!
அழுதழுது உயிர் கிழிந்தோம் அருட்கோனே!
பெம்மானே! பேருலகின் பெருமானே!
ஆண்ட இனம் மாண்டழிய அருள்வாயோ!

சோறில்லை! சொட்டு மழை நீரில்லை!
கொங்கையிலும் பாலில்லை கொன்றையோனே!
மூப்பானோம்! உருவழிந்து முடமானோம்!
மூச்சுவிடும் பிணமானோம் முக்கணோனே!
ஊன் தேய்ந்தோம்! ஊனுருகி உயிர் ஓய்ந்தோம்!
ஓரிழையில் வாழ்கின்றோம் உடையகோனே!

வேராகி, ஐம்புலனும் வேறாகி,
பொன்னுலகம் சேறாகி போகமாட்டோம்!
எம் தஞ்சை, யாம் பிறந்த பொன்தஞ்சை,
விரலைந்தும் தீண்டாமல் வேகமாட்டோம்!
தாழ்ந்தாலும், சந்ததிகள் வீழ்ந்தாலும்
தாய்மண்ணில் சாகாமல் சாகமாட்டோம்!

பொன்னார் மேனியனே! வெம் புலித்தோல் உடுத்தவனே!
இன்னோர் தோல் கருதி நீ எம் தோல் உரிப்பதுவோ!
முன்னோர் பாற்கடலில் அன்று முழுநஞ்சுண்டவனே!
பின்னோர் எம்மவர்க்கும் நஞ்சு பிரித்து வழங்குதியோ!
பெம்மானே! பேருலகின் பெருமானே!
ஆண்ட இனம் மாண்டழிய அருள்வாயோ!
வைரமுத்துவின் வைர வரிகள். வைரமுத்து இந்தப் பாடலை எழுதுவதற்கு அருகதை உடையவரே. ஏற்கனவே "கன்னத்தில் முத்தமிட்டால்.." படத்தில் வந்த 'விடை கொடு எங்கள் நாடே...' பாடலை ஈழத்தமிழ் இனத்தின் அவலத்திற்காக எழுதியவர். மீண்டும் அவருக்கு அரிய சந்தர்ப்பம். நான் நினைக்கிறேன் 'ஆயிரத்தில் ஒருவன்' படத்திற்காக இந்தப்பாடல் எழுதிக் கொண்டிருந்த சமயம் ஈழத்தில் தமிழினம் சொல்லொனாத் துன்பத்தை சந்தித்துக்கொண்டிருந்தது. அந்த பாடலுக்கு மனதில் ஈழ அவலமும் சோழநாடும் கருவாக வைரமுத்து அவர்களுக்கு தோன்ற பாடல் பிறந்திருக்க வேண்டும். இப்போது கேட்கும் போதெல்லாம் இதயத்தை பிசைகிறது.

அதே 'ஆயிரத்தில் ஒருவன்' படத்தில் வருகின்ற மற்றொரு பாடல் 'தாய் தின்ற மண்ணே...' எனத்தொடங்குகிறது. வைரமுத்துவின் வைர வரிகளுக்கு குரல் விஜய் யேசுதாஸ். அருமையான இசை. விழியோரம் கசியும் நீரை தவிர்க்க முடியவில்லை.

விடைகொடு எங்கள் நாடே
கடல் வாசல் தெளிக்கும் வீடே
பனைமரக்காடே பறவைகள் கூடே
மறுமுறை ஒருமுறை பார்ப்போமா........!
------------------
ஒவ்வொரு இடப்பெயர்வும் ஆறாத ரணம்தான். பெரும் வலிகளையே தந்தது.
'வைகைல ஊர் முழுக
வல்லோரும் சேர்ந்தெழுக
கைப்பிடியாய் கூட்டி வந்து
கரைசேர்த்து விட்டவளே'
என வைரமுத்து பாடி ஒருமுறை மேடையிலேயே கண்ணை கசக்கி நா தளுதளுத்தார். அவரைப்போலவே எமக்கு ஒன்றல்ல, நூறு இருக்கின்றன. எதை சொல்வது. ஏன் இப்பொழுது இறுதியாக இந்த வன்னி மக்கள் பட்ட அவலம் உலகில் வேறு எவனும் பட்டிருக்க முடியாது. அந்த மக்களின் மனோபலத்திற்கு முன்னால் நான் மண்டியிடுகிறேன். வானிலே இரண்டு மழை. ஒன்று எறிகணை மழை, இரண்டு விண்ணில் இருந்து வருண பகவானின் கண்ணீர் மழை. எல்லாம் தாங்கி இன்றும் ஏதிலிகளாக யாருமற்ற அனாதைகளாக முட்கம்பி முகாமுக்குள் வாழும் அந்த மக்களுடன் ஒப்பிடும் போது நாம் என்ன சந்தித்தோம். அந்த அவலங்களுடன் ஒப்பிடும் போது எமக்கிருந்த சொந்தப் பிரச்சினைகள் எல்லாம் சொத்தைப் பிரச்சினைகள்.


பிறந்த மனிதன் வாழும், ஏன் உண்ணும் உரிமை கூட மறுக்கப்பட்ட ஒரு கேவலமான இனமாக இந்த தமிழினம் இருக்கிறது. இவர்களின் இதயம் எவ்வாறு இருக்கும். எத்தனை கொடுமைகளை சந்தித்து இருக்கிறார்கள். எத்தனை வலிகளை தாங்கி கொண்டு இருக்கிறார்கள். சென்னை மரீனா கடற்கரையில் அண்ணா சமாதியிலே ஒரு வரி உண்டு. "எதையும் தாங்கும் இதயம் இங்கே அமைதியாக உறங்குகிறது". அண்ணாவை தெய்வமாக மதிப்பவர்கள் என்னை மன்னியுங்கள். ஈழத்தமிழன் ஒவ்வொருவனும் தன்னுடைய இதயத்தில் தாங்கியதை விடவா அண்ணா தாங்கிவிட்டார்.

முகாமில் வாழும் இல்லை இல்லை வாடும் மக்களே உங்களுக்கு முன்னால் நாம் கால் தூசிக்கு சமன். உங்கள் முகங்களை நேருக்கு நேர் பார்க்கும் அருகதை அற்றவர் நாம். விடியாத இரவென்று வானில் ஏதும் உண்டா என்ற அதே வைரமுத்துவின் வரிதான் மீண்டும் நினைவில் நிழலாடுகிறது.

16 கருத்துகள்:

கருத்துரையிடுக