புதன், 17 ஜூன், 2009

தோனியும் தோல்விகளும்....!

ஒரு போட்டி என்று வந்துவிட்டால் ஒருவர் தோற்றுத்தான் ஆக வேண்டும். அதுதான் நியதி. எல்லாப் போட்டிகளிலும் வெற்றி பெற முடியாது. வெற்றிக் கதாநாயகனாக வலம் வந்த தோனி இப்போது அண்மைக்காலமாக சரிவுகளை சந்தித்து வருகிறார். ஒரு தொடர் தோற்றதும் இதனை சொல்கிறோம் என்று யாரும் எண்ண வேண்டாம். தோனியை எல்லோரும் தலைக்கு மேல் வைத்துக் கொண்டாடினார்கள். அப்பா நீதான் எங்கள் தெய்வம். எம்மை காக்க வந்த காவல் வீரன் என்பது போல வாழ்த்தியும் புகழ்ந்தும் தள்ளினர். ஊடகங்கள் அவரின் புகழை பலூனை ஊதி ஊதி தள்ளுவது போல பெரிதாக்கினர். இன்று வசை பொழிய தொடங்கிவிட்டனர். அதிர்ஷ்டம் தோனியை கைவிட ரசிகர்களும் கைவிட தொடங்கி விட்டார்கள் போலும். இங்கிலாந்துடனான போட்டிக்கு பின்னர் எரித்த கொடும்பாவி ரசிகர்களின் எண்ணங்களை சொல்லும்.

தோனியால் இந்தியா பல வெற்றிகளை பெற்றது. அவுஸ்திரேலியாவில் நீண்ட ஒரு பெரிய இடைவெளிக்கு பின்னர் ஒருநாள் போட்டித்தொடரை கைப்பற்றி கோப்பையை கொண்டு வந்தார். ஆனால் அதற்கு பின்னர் இரண்டு இறுதிப்போட்டிகளில் சொதப்பிவிட்டார். ஆனால் சில தொடர்களில் இந்தியாவிற்கு வெற்றியை குவித்தார். இப்போது நிலைமை கொஞ்சம் தலைகீழ்.

ஐபிஎல் போட்டிகளிலும் தோனியின் சென்னை சுப்பர் கிங்ஸ் ஆரம்பத்தில் சரிந்தே இருந்தது. பின்னர் ஒருவாறாக தேறி அரை இறுதி வரை வந்தது. ஆனால் தோனியின் துடுப்பாட்டம் மந்தமாகவே காணப்பட்டது. இப்பொழுது அவரது அதிரடிகள் பெரிதாக இல்லை. காரணம் தெரியாது(பால் கிடைப்பதில்லை போலும்).
அவர் ஒரு அதிரடி துடுப்பாட்ட வீரர். அவ்வளவே. நல்ல துடுப்பாட்ட வீரரா? யோசித்துத்தான் சொல்ல வேண்டும். அவரது அடிகளை பார்ப்பவர்களுக்கு தெரியும், சிலவேளைகளில் பாடசாலை மட்ட வீரர்கள் ஆடுவது பார்க்க சிறப்பாக இருக்கும். பலம் ஒன்று உள்ளது. அது மட்டும்தான் அவருக்கு அதிக அளவில் கை கொடுக்கிறது. 20-20 போட்டிகளில் அவரின் 100 பந்துகளுக்கான ஓட்டவிகிதமும் அண்ணளவாக 100 தான். பெரிதாக துடுப்பாட்டத்தில் சாதிக்கவில்லை என்று சொல்லலாம். சில வீரர்களின் முட்டாள்தனமான முடிவு சில போட்டிகளை மாற்றி எதிரணிக்கு வெற்றியை தாரை வார்த்து கொடுக்கும். அதன்மூலம் சிலர் புகழ் அடைந்தனர் என்பதற்கு தோனியின் முதலாவது 20-20 போட்டி கோப்பை இறுதி போட்டியை சொல்லலாம். (இப்படித்தான் 1999 ல் குலூஸ்னர் பார்த்த அடி முட்டாள்தனமான செயல் தென்னாபிரிக்காவை பாதித்தது).

இந்தியாவின் பெரிய பலமே துடுப்பாட்டம்தான். அதுவும் பெரிதாக இந்த தொடரில் சோபிக்கவில்லை. தோனியோடு சேர்ந்து அவருக்கு பின்னால் இளம் அணி இளம் அணி என்று அலைந்த தேர்வாளர்கள் இனி என்ன செய்வார்கள்.

இதற்கிடையில் விரேந்தர் ஷேவாக் உடன் முறுகல் என்ற கதையும் உள்ளது. இது எவ்வளவு உண்மை என்று தெரியாது. எல்லாம் சேர்ந்து தோனியை வாட்டி வதைக்கின்றன. களத்தில் எடுக்கும் முடிவுகளில் குழப்பம். அணித்தெரிவுகளில் குழப்பம் (இதை விட நல்ல அணி எவ்வாறு எடுப்பது. தெரிந்தவர்கள் சொல்லுங்கள்) என்றெல்லாம் விமரிசனம் பலவாறாக உள்ள நிலையில் தோனி நிலை கவலைக்கிடமே. ஆனால் அவருக்கோ அவர் தலைமைப்பதவிக்கோ இப்போதைக்கு எந்த ஆபத்தும் அண்மையில் இருக்காது.

இந்த வலைப்பூக்களில் ஒரு பதிவிலே தோனிக்கு அதிர்ஷ்டம் மட்டுமே உள்ளது என்று எழுதிய ஒருவர், பின்னர் சொன்னார் இதை யாரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். என்னை அடிக்க வருவார்கள். ஏன் வம்பு நான் ஒதுங்குகிறேன் என்றார். அவர் கருத்தை நான் வழிமொழிகிறேன்.

அடுத்து மேற்கிந்திய தொடர். அதுவும் அவர்கள் மண்ணில். பார்ப்போம் சாதிப்பாரா என்று. இது ஒன்றும் தோனிக்கு எதிராக எழுதிய பதிவல்ல. ஆனால் அவரை தலையில் தூக்கி வைத்து ஆடுபவர்களுக்கான பதிவு. அவ்வப்போது தோல்விகள் வரத்தான் செய்யும். தாங்கித்தான் ஆக வேண்டும். விமரிசங்கள் கடுமையாக வரும். புகழ்ந்து புகழ்ந்து எழுதிய ஊடகங்கள் தோல்வியை சந்தித்த உடன் காலில் போட்டு மிதிப்பது போல எழுதுவார்கள். கங்குலியிடம் இருந்து இதை படிக்க வேண்டும். எனவே இந்தியா நன்றாக விளையாடக்கூடிய அணி. அவர்களைப்போல அணி உலகில் இல்லை. ஏனெனில் எப்பொழுது வெல்வார்கள். எப்பொழுது கவிழ்ப்பார்கள் என்று அறுதியிட்டு கூற முடியாது. எதிர்பாராத நேரத்தில் அடித்து நொருக்கி ஆட்டம் போடுவார்கள். ஆனால் எதிர் பார்க்கின்ற நேரத்தில் காலை வாரிவிடுவார்கள். அதுதான் இம்முறையும் ரசிகர்களுக்கு நடந்துள்ளது.

இதுதான் கிரிக்கட். அதிலும் இதுதான் இந்திய கிரிக்கட்...!

13 கருத்துகள்:

கருத்துரையிடுக