புதன், 17 டிசம்பர், 2008

ராகுல் ட்ராவிட்: காலம் முடிகிறதா...?


1996ம் ஆண்டு லோர்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்திற்கு எதிராக இந்தியா விளையாடிய போது இரண்டு புதிய வீரர்கள் களமிறக்கப்பட்டனர். ஒருவர் சவுரவ் கங்குலி. இன்னுமொருவர் ராகுல் ட்ராவிட். முன்னவர் வங்கதேசம் பின்னவர் கர்நாடக மாநிலம்.

இந்த இருவரும் தமக்கு தந்த பணியை செவ்வனே செய்தனர். கங்குலி ஓய்வும் பெற்றுவிட்டார். ஆனால் ட்ராவிட் இன்னமும் விளையாடிக் கொண்டிருக்கும் அதேவேளை அவருக்கான ஓய்வு நேரம் நெருங்குகிறதா? அல்லது கட்டாய ஓய்விற்கு தள்ளப்படுவாரா என்ற பல கருத்துக்கள் எழுந்துள்ளது.

இந்தியாவின் துடுப்பாட்ட சுவர் (BATTING WALL) என்று எல்லோராலும் அழைக்கப்பட்டவர். நிதானமாக தொடங்குவார். பின்னர் களத்தில் இவர் நின்றால் ஓட்டம் ஏறுவது தெரியாது. அதிரடியும் இல்லை. ஆமை வேகமும் இல்லை. நிதானமாக ஓட்டங்களை குவித்து எதிரணியை மிகுந்த சிரமத்திற்குள்ளாக்குவார். இவரால் இந்தியா பெற்ற வெற்றிகள் ஏராளம். ஏன் தனித்து நின்றே வெற்றிகளைக் குவித்து இருக்கிறார். அப்துல் ஜபார் தமிழில் அழகாக சொல்வதானால் மிகச்சிறந்த மட்டையாளர்.

சிறிதுகாலமாகவே ட்ராவிட் உடைய மட்டை ஓட்டங்களை சேகரிக்க தவறுகிறது. காரணம் கண்டு பிடிக்க முடியவில்லை. இது ட்ராவிட்டுக்கு மட்டுமல்ல ரசிகர்களுக்கும் ஏன் தேர்வாளர்களுக்கு கூட சங்கடமாகத்தான் இருக்கிறது. அற்புதமான வீரர். Class is Permanent. Form is Temporary. ட்ராவிட் இடம் எப்போதும் தரம் இருக்கிறது. ஆனால் இப்போது நேரம் இல்லை. நன்றாக ஆடக்கூடியவர். ஆனால் இப்போது முன்பு மாதிரி இல்லை. 2006 ம் ஆண்டு தென்னாபிரிக்காவிற்கான் சுற்றுப்பயணத்தில் இருந்து இந்த பிரச்சினையை ட்ராவிட் எதிர் கொள்கிறார் என்றுதான் கூறவேண்டும். அதற்கு முன்னதாக மேற்கிந்தியாவிற்கெதிரான தொடரை வராலாற்று வெற்றியாக படைத்ததில் ட்ராவிட்டின் துடுப்பாட்டமும் தலைமைத்துவமும் காரணம்.

2006 இறுதியில் தென்னாபிரிக்கத் தொடரில் இருந்து கடைசியாக சென்னையில் நடந்த இங்கிலாந்திற்கெதிரான போட்டி வரை உள்ள தொடர்களின் பெறுபேறுகள் கொண்ட அட்டவனை கீழே உள்ளது.மேலுள்ள அட்டவணையில் இருந்து ட்ராவிட்டின் மோசமான பெறுபேறு பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள முடியும். எல்லா காலத்திலும் எந்த துடுப்பாட்ட வீரனும் சாதிக்க முடியாதுதான். லாறா, சச்சின், பொண்டிங், சங்ககார போன்றவர்களும் சொதப்பித்தான் இருக்கிறார்கள். இவர்களை நினைத்து ரசிகர்களும் கவலைப்பட்டிருக்கிறார்கள். ஆனால் இரண்டு தொடர்களுக்கு பிறகு தேறி விடுவார்கள். இப்போது ட்ராவிட் அப்படியும் இல்லை. போர்மில் இல்லை என்று சொல்லலாம். ஆனால் அவரின் தரமான விளையாட்டிற்காகத்தான் இவ்வளவு நாளும் அணியில் சேர்த்திருந்தார்கள். அவர் மீண்டு வருவார் மீண்டு வருவார் என்றால் ட்ராவிட் மீண்டும் மீண்டும் ஏமாற்றுகிறார்.

தென்னாபிரிக்காத் தொடருக்கு முன்னர் அவரது சராசரி 58.75 இப்போது அவரைப் பொறுத்தவரைக்கும் அதளபாதாளம். முன்பு தொடக்கத்திற்குத்தான் அதிக பந்துகளை சந்திப்பார். ஆனால் போகப்போக ஓட்டங்களை குவித்து 100 பந்துக்கான ஓட்டவீதத்தை(Strike Rate)நன்றாக பேணுவார். இப்போது துடுப்பாடும் போது கூட தெரிகிறது. தற்காப்பு ஆட்டமும், பதட்டத்துடனும் கூடிய நிதானமும் கொண்டதாக உள்ளது. சில வேளைகளில் ட்ராவிட் தானா இப்படி துடுப்பெடுத்தாடுகிறார் என்று எண்ணத்தோன்றுகிறது. ஒரு துடுப்பாட்ட சுவர் சரிகிறது என்று எல்லோருக்கும் கவலை.

தேர்வாளர்களின் தலைவராக இப்போது ஸ்ரீகாந்த். இவர் மனது வைத்தாலே ஒழிய, மற்றபடி இந்த துன்ப நிலை நீடித்தால் ட்ராவிட் அடுத்த தொடருக்கு தெரிவு செய்யப்படுவது சந்தேகமே. ஏனெனில் புள்ளிவிபரங்கள் எல்லாம் ட்ராவிட்டுக்கு எதிராகவே உள்ளன. வரப்போகின்ற போட்டிகள் இந்தியா, இங்கிலாந்தை விட ட்ராவிட்டுக்கு கடும் சோதனையாக இருக்கும். சென்னையில் வெற்றி பெற்றதால் வெற்றி அணியை (WINNING COMBINATION) குலைக்காமல் விளையாடுவார்கள். ஒருவேளை தோற்றிருந்தால் நிலைமை வேறுமாதிரியாக மாறி இருக்கும்.

நல்ல துடுப்பாட்ட வீரனை இந்திய அணி இழக்கிறது என்ற வருத்தம் எல்லோரிடமும் உள்ளது. அதே நேரத்தில் வெளியே நிறைய இளைய வீரர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள். ரோகித் சர்மா, விராத் கோழி, விஜய், பத்ரிநாத், சுரேஷ் றைனா என நிறையவீரர்கள். ட்ராவிட் போல இவர்கள் எல்லாம் வருவார்களா? ட்ராவிட் இடத்தை நிரப்பமுடியுமா? என்றால் வாய்ப்பு கொடுத்துப்பார்த்தால்தான் தெரியும். அதேநேரத்தில் டோனியும் இளம் அணி இளம் அணி என அடம்பிடிப்பதால் தேர்வாளர்களும் அவர் பின்னால் நிறக நேரிடுகிறது. காரணம் இந்தியாவிற்கு எதிர்பாராமல் நிறைய வெற்றிகளைத் தேடித்தந்து விட்டார்

ஒருநாள் அணி. கதையே வேண்டாம் கனவில கூட ட்ராவிட் அந்த இடத்தை நினைக்க முடியாத அளவிற்கு துடுப்பாட்ட வரிசை உள்ளது. இப்போது பந்து ட்ராவிட்டின் துடுப்பை நோக்கி வீசப்படுகிறது. லாவகமாக தட்டிவிட்டு நான்கு ஓட்டத்தைப் பெற்று அணிக்குள் இருப்பாரா? அல்லது கிளீன் போல்ட் ஆகி வாழ்வை முடித்துக்கொள்வாரா? பொறுத்து இருந்து பார்ப்போம்.

(மீண்டும் வருவேன் என்கிறாரா? அல்லது போகிறேன் என்கிறாரா?)
மீண்டு வரவேண்டும் அதுதான் எல்லோர் விருப்பமும். மீண்டும் வரும் நேரத்தில் அவரைப் பற்றி மீண்டும் எழுதவேண்டும் என்றும் ஆவலாக இருக்கிறது.

28 கருத்துகள்:

கருத்துரையிடுக