திங்கள், 15 டிசம்பர், 2008

இந்தியாவின் இமாலய வெற்றி!

இப்போது ஆஸ்திரேலியர்களின் பேச்சு கிரிக்கட்டில் அடிபடுவது குறைந்து கொண்டு வருகிறது. காரணம் இந்தியாவின் அசுர எழுச்சி. 'அட நம்மாளா இப்படி பொழந்து கட்டுறான்' என சில இந்திய ரசிகரே வியக்கும் அளவிற்கு இருக்கிறது. மகிழ்ச்சிதானே. தொடரட்டும் வெற்றிக் குவிப்புகள்.

இங்கிலாந்தின் வெற்றிக் கனவை சேவாக் அடித்து நொருக்கி ஆட்டம் காணவைத்தார். பின்னர் சச்சினும் யுவராஜ் சிங்கும் இணைந்து இந்தா அந்தா இங்கிலாந்து வெல்லுது என்ற போட்டியை இலகுவாக தம்பக்கம் திருப்பி வெற்றிக்கனியை சுவைத்தனர்.

டெஸ்ட் போட்டி வரலாற்றில் மகத்தான வெற்றி. 4வது இன்னிங்ஸ்சில் துடுப்பெடுத்தாடி பெறப்பட்ட நான்காவது பெரிய வெற்றி. இரண்டாவதும் இந்தியாவிடம்தான் உள்ளது.

உண்மையில் சேவாக்கின் அதிரடிதான் போட்டியின் போக்கையே மாற்றியது. 1999ல் இப்படித்தான் பாகிஸ்தனிற்கு எதிராக அதுவுமிதே சென்னையில் நடந்த போட்டியில் சச்சின் இறுதி நேரத்தில் காலை வார இந்தியாவிற்கு ஒரு பரிதாப தோல்வி நிகழ்ந்தது. 271 என்ற வெற்றி இலக்கை நோக்கி ஆடிக்கொண்டிருந்த இந்தியா ஆரம்பத்தில் தடுமாறி பின்னர் சச்சின் மொங்கியா இணை மூலம் வெற்றியை எட்டும் நேரத்தில் 17 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் 7வது விக்கட்டாக சச்சின் ஆட்டமிழந்தார். பின்னர் என்ன 4 ஓட்டங்களுக்குள் கதை முடிந்துவிட்டது.

இன்றும் வருணனையாளர்கள் அதை திரும்ப திரும்ப சொல்லிக்காட்டினார்கள். ஆனால் சச்சின் இம்முறை தேவையற்ற எந்த விதமான அடித்தெரிவுகளுக்கும் (Shot Selection) ற்கும் போகவில்லை. மிக மிக நிதனாமாக, தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் போட்டியை வைத்திருந்தார். Class is Permanent. Form is Temporary. என்பார்கள் ஆனால் இரண்டும் கைவரப்பெற்றவர் சச்சின். இதை இன்று எல்லோரும் அவதானித்திருப்பார்கள். இதே வாசகத்திற்கு ராவிட்டும் பொருத்தம்தான். இப்போது அவரிற்கு நேரம் சரியில்லை என்றுதான் சொல்ல வேண்டும். மனிதர் இவ்வளவு மோசமாக ஆடுகிறாரே. எல்லோருக்கும் இது மிகப்பெரிய கவலை. துடுப்பாட்ட சுவர் இடிந்து விழுகிறதா? அல்லது விழுந்து விட்டதா?

இங்கிலாந்து ஏன் தோற்க வேண்டும்? என்ன தவறு செய்தார்கள்? இதை விட எவ்வாறு நன்றாக விளையாட முடியும்? பிளிண்டொவ் நிறையவே மிரட்டுகிறார். பந்துடன் ஜாலங்கள் காட்டுகிறார். இந்தியர்கள் அவரை மதித்தே ஆடினர். ஆனால் அவர்கள் இரண்டாவது இன்னிங்ஸ்சில் இன்னமும் கொஞ்சம் வேகமாக விளையாடி ஓட்டங்களை சேகரித்திருக்கலாம்.

மும்பை பயங்கரத்திற்கு பிறகும் இங்கிலாந்து இங்கே வந்து விளையாடி இருக்கிறது. அவர்களுக்கு ஒரு பாராட்டு உண்டு.

யுவராஜ் தன் இடத்தை தக்கவைத்துக் கொண்டார். இந்தப் போட்டியில் வென்றதால் இப்போதைக்கு ராவிட்டின் தலை உருளாது. மீண்டும் இதே அணி மொகாலியில் விளையாடும். ராவிட் அந்தப்போட்டியை தனக்கு சாதகமாக்குவாரா? பொறுத்திருந்து பார்ப்போம்.

நிறைய சாதனைகள் நிறைந்த போட்டியாக இது அமைந்துவிட்டது. இங்கிலாந்து அணியிலும் பெரிதாக மாற்றம் இருக்காது. ஓவே ஷா வின் இடத்தில் அமர்ந்த போல் கொலிங்வூட் தன் இடத்தை கெட்டியாக பிடித்துக் கொண்டார். எனவே ஷா இப்போதைக்கு வெளியில் இருந்து போட்டியை கண்டுகளிக்க வேண்டியதுதான். கிறீம் சுவானும் நன்றாக கவர்ந்திருக்கிறார். அண்டர்சன் அல்லது ஹார்மிசனுக்கு பதிலாக ஸ்ருவர்ட் புரோட் இற்கு வாய்ப்பு வழங்கப்படலாம். பொறுத்திருந்து பார்ப்போம்.
மீண்டும் ஒரு கிரிக்கட் பதிவில்........!

7 கருத்துகள்:

கருத்துரையிடுக