திங்கள், 24 நவம்பர், 2008

பொறுப்பற்ற ஆட்டம்....!

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4வது போட்டி நேற்று பெங்களூர் சின்னசுவாமி மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக நடைபெற்றது. இதில் இந்தியா டக்வேர்த்-லூயிஸ் முறையில் 19 ஓட்டங்களால் வென்றது தெரிந்ததே.

உண்மையில் இந்தியா இந்த தொடர் முழுவது நன்றாக விளையாடி வரும் நிலையில் இங்கிலாந்து அணியும் மோசமாகவே விளையாடி வருகிறார்கள்.

நேற்றைய ஆட்டம் இங்கிலாந்திற்கு வாழ்வா சாவா போட்டி. என்னைப் பொறுத்தவரை இங்கிலாந்து அணியிடம் இருந்த போட்டியை அவர்களாகவே இந்தியாவிடம் தாரைவார்த்துக் கொடுத்தனர்.

டக்வேர்த்-லூயிஸ் முறையில் இங்கிலாந்தின் வெற்றி இலக்கு 198. அதுவும் 22 ஓவரில். இது ஒரு கடின இலக்குத்தான். ஆனால் 20-20 போட்டிகளில் நன்றாக பரிச்சயம் உள்ள வீரர்களுக்கு இது ஒரு பொருட்டல்ல. ஆரம்ப ஜோடிகள் பெல்-போபரா இணை மிக மோசமாக விளையாடியது. இதுதான் போட்டியின் திசையை மாற்றியது என நான் கருதுகிறேன். 6 ஓவரில் வெறும் 21ஓட்டங்கள் தான். பீட்டர்சன் என்ன நினைத்தாரோ தெரியாது. ஆரம்ப இணையின் விளையாட்டு உத்தி தாக்குதல் பாணியில் அமையவில்லை. அடித்து ஆட முயன்று ஆட்டமிழந்தால் யாரும் எதுவும் சொல்ல மாட்டார்கள். அடிக்க முனைந்து ஆட்டமிழந்தார் என்பர். ஆனால் அவர்கள் இருவரும் அந்த உத்திக்கு எத்தணிக்கவே இல்லை. போபரா ஆட்டமிழக்க பின்னால் வந்த ஓவே ஷா வும் மெதுவாகவே ஆரம்பித்தார். இவை பின்னால் வந்த வீரர்களுக்கு அழுத்தம் கூட்டுவதாகவே அமைந்தது.
அருமையான வாய்ப்பை இங்கிலாந்து வீரர்கள் பயன்படுத்த தவறிவிட்டனர். இந்தியாவிற்கு 5வது பந்து வீச்சாளர் பகுதிநேரப்பந்து வீச்சாளரே. அதையும் அவர்கள் பெரிதாக பயன்படுத்தவில்லை.

பீட்டர்சன் துடுப்பாடும் போது பட்தட்டம் தெரிகிறது. அணித்தலைவர் என்ற சுமை அவரது துடுப்பாட்டத்தை இந்தத்தொடரில் வெகுவாகவே பாதித்துவிட்டது. 3ம் இலக்க வீரராக பிளிண்டொவ் இனை இறக்கி பீட்டர்சன் கொஞ்சம் பின்னாலே வந்திருக்கலாம். அவர் செய்கிறாரோ இல்லையோ ஏனைய வீரர்களுக்கு மனதில் தைரியத்தை கொணர்ந்திருக்கும்.

அதிர்ஷ்டம் இல்லை என்பதைவிட இங்கிலாந்து போட்டியில் சிறந்த திட்டமிடல் இல்லாததால் கோட்டை விட்டது. மீண்டு ஒரு வெற்றி இந்தியர்க்கு. இது தொடரை அவர்கள் வசமாக்கிவிட்டது.

மீண்டும் ஒரு கிரிக்கட் பதிவில்........!

7 கருத்துகள்:

கருத்துரையிடுக